இலங்கை அரசாங்கம் திட்டமிடல் இன்றி தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நாடு முடக்கப்படுவதாக திடீரென விடுக்கப்பட்ட அறிவிப்பால் நகர்ப்பகுதிகளில் மக்கள் அதிகரித்த நிலை தொடர்பாக கவலை வெளியிட்டு அவர் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்று அதிகரித்த போதே மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் இணைந்து நாட்டை முடக்கி கொரோனாவை கட்டுப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தனர். எனினும் இது தொடர்பில் அசட்டை செய்து வந்த அரசாங்கம் வேண்டா வெறுப்பாக எத்துயர் ஏற்பட்டாலும் அதனை மக்களே எதிர்கொள்ளட்டும் என்ற மக்கள் விரோத சிந்தனையுடன் திடீரென நாட்டை முடக்குவதாக தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக பொது மக்கள் பலரும் நகர்ப்பகுதியில் அதிகளவில் ஒன்று கூடியிருந்தனர். இது கொரோனா தொற்றை நிறுத்துவதற்கு பதிலாக அதிகரிப்புக்கே வழிவகுத்துள்ளது.
வங்கிகள், நகை அடைவு வைக்கும் இடங்களில் மக்கள் அதிகமாக காணப்பட்டனர். வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
அரசாங்கம் ஒரு நாள் தவணை வழங்கி நாட்டை முடக்கியிருக்கலாம். திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.