இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடரில், நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா 152 ரன்கள் குவித்துள்ளார்.நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் அடித்துள்ளார். அவருடைய பேட்டிங் ஆவரேஜ் 50.67 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 47.2 ஆக உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மிக அற்புதமாக விளையாடிய ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்தியாவை தவிர்த்து வெளியூர் மைதானத்தில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இந்நிலையில் சதம் அடித்தால் தான் சிறந்த வீரர் என்று அர்த்தம் கிடையாது என்றும் அவர் மிகவும் நேர்த்தியாக விளையாடி வருகிறார் என்றும் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மாவை புகழ்ந்து கூறியுள்ளார்.மேலும் நடக்கயிருக்கின்றன டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக அவர் சதம் அடிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.ங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் மிகவும் பொறுமையாக விளையாடி வருகிறார். எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்கிற கணிப்பு அவரிடம் காணப்படுகிறது என்றும் அவருடைய ஆட்டத்தில் நிதானம் அதிக அளவில் காணப்படுகிறது என்றும் சுனில் கவாஸ்கர் பாராட்டி கூறியுள்ளார்.
இதே ஆட்டத்தை ரோகித் சர்மா தொடரும் பட்சத்தில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடியும் நிலையில் நிச்சயமாக அவர் 400 முதல் 450 ரன்கள் குவிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் நிச்சயமாக இனி வர இருக்கின்ற டெஸ்ட் போட்டியில் அவர் தன்னுடைய சதத்தை பதிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.சதம் அடிப்பதைத் தாண்டி அவர் நல்ல பார்மில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் என்றும், ஒரு கேப்டனுக்கு தனது அணி வீரர் ரன் அடிப்பது தான் முக்கியமே தவிர சதம் எடுத்தே தீரவேண்டும் என்கிற தீர்மானம் இல்லை என்றும் கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜோ ரூட் 2 டெஸ்ட் போட்டியில் 386 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.244 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் கேஎல் ராகுலும், மூன்றாவது இடத்தில் 152 ரன்கள் குவித்து ரோகித் சர்மா உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திய அணியை சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.