ஸ்ரீலங்கா பொலிஸார் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார்.கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத் தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 09.30 க்கு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்ட அவரிடம், 11.30 வரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஆண்டு கடலில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டமை குறித்து, தம்மிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விசாரணைகள் அனைத்தும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளே எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மேலும் தெரிவித்தார்.