இலங்கையின் ஏழு அறிவினை கொண்ட புதிய நிதியமைச்சர் வந்த பின் எல்லாம் தலைகீழாக மாறும் என்று கூறியபோதும் இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பொதியை தட்டிப் பறித்த அரசாங்கம் அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்றுமொரு மரண தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுவரை வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரணத்திற்கு பதிலாக 1998 ரூபா ஏமாற்று நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனை இலவசமாக விநியோகிப்பதாக பொய் தகவல் வௌியிடுகிறார்கள்.
தொற்று நோய் காலத்தில் நாட்டு மக்களுக்கு சௌகரியத்தை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் அசௌகரியத்தை மக்கள் மீது சுமத்தி வருகிறது.
7 அறிவு கொண்ட புதிய நிதி அமைச்சர் வந்த பின் எல்லாம் தலைகீழாக மாறும் என்று கூறியபோதும் இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த வாரம் 160 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீன இவ்வாரம் 50 ரூபாவால் அதிகரித்துள்ளது. விலை கட்டுப்பாட்டில் அரசாங்கத்தின் இயலாமை இதன்மூலம் வௌிப்படுகிறது.
நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று கூறும் சுகாதார அமைச்சர்கள் பின் கதவு வழியாக தூதரகங்கள் மூலம் மருந்துகளை கோருகின்றார்கள். நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கத்தினால் முடியவில்லை.
இலங்கையில் கொரோனா பாதிப்பு வீதம் 15.8% ஆக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளமை மிகவும் அபாயகரமானதாகும். கொரோனா பாதிப்பு குறித்த தரவுகள் இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.