இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக இருந்தவர்கள் யார் என்பதை பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. தீவிரவாத செயற்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்தியிருந்தால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தம்முடைய விசாரணைகள சுதந்திரமாக முன்னெடுத்துச்செல்ல முடிவதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அவரது கருத்தில் தீவிரமான ஒரு விடயம் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் அவருக்கு அந்த சுதந்திரம் காணப்படவில்லை என்பதே அந்த தீவிரமான காரணம். பொலிஸ்மா அதிபர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பதில் தமக்கு தடை ஏற்பட்டதாக தெரிவிப்பாராயின், அவ்வாறு அவருக்கு தடையாக இருந்த நபரை வெளிப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இதுவொரு தீவிரவாத செயற்பாடு, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் செயற்பாட்டிற்கு தடையேற்படுத்தியிருப்பார்கள் எனின், அழுத்தத்தை பிரயோகித்திருப்பார்கள் எனின் அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தமக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவிக்க முடியாது. அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.