பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரதமரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், கடந்த சில நாட்களாக, பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக அறிக்கைகள், கொரோனா வைரஸ் தொற்றால் பிரதமர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முதலில் கொழும்பில் உள்ள நவலோக மருத்துவமனையிலும் பின்னர் லங்கா மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், 27ஆம் திகதி நடைபெற்ற கொரோனா தடுப்புச் செயலணியின் குழு கூட்டத்தில் பிரதமரும் கலந்து கொண்டிருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நலமுடன் இருப்பதாகவும் வழக்கம் போல் தனது கடமைகளை செய்து வருகிறார் என்றும் தென்னிலங்கை ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.