ஸ்ரீலங்காவின் சுகாதாரத் துறையை முழுமையாக இராணுவ மயப்படுத்துவதற்காக சூட்சுமமான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்துவருவதாக அரச தாதியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய,இராணுவத்தினர் நிர்வகிக்கும் தடுப்பூசி நிலையங்களுக்கு சீரான விநியோகத்தை மேற்கொள்ளும் அரசாங்கம், சுகாதார துறையினரால் நிர்வகிக்கப்படும் நிலையங்களுக்கு தடுப்பூசி மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.
எமது நாட்டின் சுகாதாரத்துறையை தற்போதைய அரசாங்கம் குறைத்தே மதிப்பீடு செய்து வருகிறது. பைசர் தடுப்பூசி ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்டாலும் அவை தற்போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நல்ல விடயங்களை செயற்படுத்துகையில் இராணுவமே பொறுப்பேற்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதாயின் பைஸர் தடுப்பூசியே பெற்றுக்கொள்ள வேண்டும். சீனத்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டால் அந்நாடுகளுக்கு செல்ல முடியாது. இந்நிலையில் சுகாதாரப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் தட்டுப்பாடு காணப்படுகின்றன. மக்களுக்கு தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி அளிக்கப்படுகையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதால் பெரும் நெருக்கடி தலைதூக்குகிறது.மோதலும் ஏற்படுகிறது.
ஆனால் இராணுவம் நிர்வகிக்கின்ற தடுப்பூசி நிலையங்களில் சரியான முறையில் தடுப்பூசி விநியோகம் ஏற்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. 10 இலட்சம் பேருக்கு குறுகிய நாட்களில் தடுப்பூசியை சுகாதாரத் தரப்பினரால் அளிக்கமுடியும். ஆனால் தடையற்ற தடுப்பூசி விநியோகத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி நிலையத்திற்கு 24 மணிநேரம் விநியோகம் உள்ளது. இந்நிலையில் சுகாதார பிரிவு பலவீனமானது என்பதை சூட்சுமமான முறையில் திரையிட அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்றார்.