இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் என்கின்ற பெயரில் அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புகள் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன், ஐ.நா வதிவிடப்பிரதிநிதியின் அலுவலகம் இலங்கை அரச உயர்பீடத்திடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளன.
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு நாணய கையிருப்பு இன்மையால் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனி விலை ஒரு கிலோ 230 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த சீனி மூடைகள் கடந்த சில நாட்களாக அரச அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல, சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகள் என அறிவித்து நேற்று இரவு வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியது. அதேபோல அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசதலைவர் நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அரச தலைவரது இந்த செயற்பாடுகள் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.