சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் போஷகரும், முன்னாள் அரச தலைவருமான சந்திரிகா குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியை அழிக்கின்ற மஹிந்த – மைத்திரியின் நிகழ்ச்சி நிரலில் தம்மை படுகொலை செய்கின்ற சூழ்ச்சியும் இருப்பதாக அதிர்ச்சி தகவலொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்று ஏற்பட்டிருக்கின்ற தலையெழுத்தைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையடைகின்றேன். கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலைமையை நினைத்தால் தினமும் காலையில் படுக்கையிலிருந்து எழவும் தோன்றுவதில்லை. கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவுக்கு நானும் காரணம். எனினும் என்னால் செய்யமுடியாமற் போன சில விடயங்களுக்காக வருத்தமடைகின்றேன்.
1994ஆம் ஆண்டில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தபடியினால் நாட்டிற்கு செய்த சேவை காரணமாக தொடர்ந்தும் 23 வருடங்களாக ஆட்சியில் இருக்கமுடியுமான பலம் உருவாகியது. 2007ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் அரசியலுக்கு வரும்படி பலரும் அழைத்தார்கள். இருப்பினும் நாட்டிற்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள நிலைமையை உணர்ந்தவளாக மீளவும் வந்தேன்.
2015ஆம் ஆண்டில் தனித்து நான் முடிவெடுத்தேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்லாமல் நாட்டிற்கு ஏற்படுகின்ற அழிவை தடுப்பதற்கு சோபித்த தேரர் உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ்,முஸ்லிம்,சிங்கள கட்சிகள் அழைத்தபோது, கூட்டணியை அமைப்பதற்கான யோசனையை நானே முன்வைத்தேன்.
எனக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டு தலைவர்களுமே கட்சியை அழித்தார்கள். அவர்களில் ஒருவர் உலகத்திலுள்ள சூதாட்டக்காரர்களை உள்நாட்டிற்கு அழைத்துவந்தார். போதைப்பொருள் கடத்தலை செய்வோரை நாடாளுமன்றத்திற்கு அழைத்தார். அதனை எதிர்த்ததால் என்னையும் படுகொலை செய்யும் அளவுக்கு ஆலோசனை நடத்தினார்கள். என்மீது சேறுபூசினார்கள். கட்சியை பாதுகாப்பதாக வந்த மைத்திரி மீண்டும் ராஜபக்சவுடன் இணைந்து கட்சியை அழிக்கத்தொடங்கினார். எனினும் எமது சுதந்திரக் கட்சியை அழிக்க எவராலும் முடியாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.