இராஜதந்திரிகள், எதிர்க்கட்சியினரது எதிர்ப்புகளையும் மீறி அவசர காலசட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்வதன் பின்னணியில் இராணுவ ஆட்சிக்கான ஆரம்பம் இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர் எனவும் ஐக்கியமக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அவசர காலசட்டத்தை தவிர சாதாரண நடப்புச் சட்டங்களை வைத்தே கட்டுப்படுத்த முடியும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார்.
அவசர கால சட்டத்தைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த உண்மையிலேயே அவசரகால சட்டம் அவசியமில்லை. எமது நாட்டில் பாவனையாளர்கள் அலுவல்சட்டம் எனப் பல்வேறு சட்டங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி விலைக்கட்டுப்பாட்டைப் பேணமுடியும். சீனி, எரிபொருள், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுவான சட்டங்களே போதுமானவை. இன்று அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்றும் கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர்.
அன்டிஜன் தொடக்கம் அரிசி வரை அரசாங்கத்துடன் தொடர்பிலிருப்பவர்களே இறக்குமதி செய்கின்றனர். நேரடியாகவே அவர்களுக்கு பணிப்புரையை கோட்டாபயவினால் வழங்க முடியும். எனினும் அவசரகால சட்டத்தை கொண்டுவந்து இந்த மோசடிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை காண்பிக்கவே அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர். இராணுவ ஆட்சியின் ஆரம்பமே இதுவாகும். இதற்கெதிராக மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் கிளர்ந்தெழும்பவுள்ள நிலையில் அதனை அடக்கியாளவே இன்று அவசர காலச் சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றது” என் தெரிவித்தார்.