சிறிலங்கா நாடாளுமன்றத்தில இன்றைய தினம் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாலைதீவில் மற்றுமொரு தீவை உருவாக்குவதற்காக சில தரப்பினரால் ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். குறிப்பிட்ட சில குழுவினரால், ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு மணல், மாலைதீவில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய தீவிற்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இந்த கடத்தல் செயற்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாகவும், அதேபோல கிழக்கு மாகாண ஆளுநரான அநுராதா யஹம்பத்தும் இதற்கு ஒத்துழைத்து வருவதாகவும் சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான கடத்தல் செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்காவுக்குக் கிடைக்கவிருந்த பெருமளவு அமெரிக்க டொலர் வருமானம் இல்லாமல் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் அரச தரப்பினரே இன்று அரசாங்கத்தை மதிக்காமல், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும், ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இது சம்பந்தமாகபதிலளிக்க அவகாசத்தைக் கோரினார்.