இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தகவலை பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் குறித்து பாப்பரசரை சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எடுத்துவரும் முயற்சிகளுக்கு, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், அரசாங்கம் பொய்யுரைப்பதற்காக சர்வதேசத்தை நாடுமெனின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தானும் சர்வசேத்தை நாடத் தயங்கப்போவது இல்லையென, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.