நினைவேந்தல் நிகழ்வுகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞர் யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையும், இராணுவமும் கடத்தி, சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில், சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் ஸ்ரீலங்காவைப் பற்றி விவாதிக்கும் போது, பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெற வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வலியுறுத்தியுள்ளது. மாறாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுவதாக மாத்திரம் அறிக்கையிடுவது போதுமானதாக அமையாது என அந்த செயற்றிட்டத்தின் நிர்வாகப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் அமைதியான முறையில் தமது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் சிலர் கொடூரமாக தடுத்து வைக்கப்படுவதாகவும், சூடான உலோகக் கம்பிகள் மற்றும் சிகரெட்டுகளால் சூடுவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெற்றோலில் நனைத்த பொலிதீன் பைகளுக்குள் முகத்தை திணித்து மூச்சுத் திணறடிக்க செய்யபடுவதோடு, பாதுகாப்புப் படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் சர்வதேச விசாரணையாளர்கள், தற்போது பிரித்தானியாவில் உள்ள 15 தமிழர்களிடமிருந்து விரிவான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் 2019 நவம்பரில் ஜனாதிகதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகமானவர்கள் இந்த ஆண்டு நிகழ்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எனவும், மேலும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தன்னார்வலர்களாக பணியாற்றியவர்கள்.
வெள்ளை வான்களில் தாங்கள் கடத்தப்பட்டதாக ஆறு பேர் தெரிவித்துள்ளனர். சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தவர்களில் மோசமான பயங்கரவாத தடுப்பு காவல்துறை பிரிவுடன் சீருடையில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளும் அடங்குவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் கடந்த வருடம் எந்த காவல் நிலையத்தில் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பதை நினைவில் வைத்துள்ளதோடு, அதில் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையத்தின் பின்புறத்தில் உள்ள கட்டிடங்களின் வரைபடத்தை வரைந்து காட்டியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.