இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
மூன்றாவது போட்டியில் மிக மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்ததாலும், நான்காவது போட்டி நடைபெற்ற ஓவல் மைதானத்தில் இந்திய அணி கடந்த 50 வருடங்களாக ஒரு போட்டியில் கூட வென்றது இல்லை என்ற வரலாற்றாலும், ஓவல் மைதானத்தில் இந்திய அணியால் வெல்ல முடியாது, மிக மோசமான தோல்வியை இந்திய அணி சந்திக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால், நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 50 வருட வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்தது.
இந்திய அணியின் இந்த வெற்றியில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாகூர் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்வின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இதில் பும்ராஹ் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டார், ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்ஸிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ஷர்துல் தாகூரோ இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே யாரும் எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தி மாஸ் காட்டினார். இதனால் ஷர்துல் தாகூருக்கே ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த காரணத்தினால் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு விமர்ச்சனங்கள் இருந்தாலும், இந்த ஆட்டநாயகன் விருது மூலம் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். நான்காவது போட்டியில் ரோஹித் சர்மா வென்ற ஆட்டநாயகன் விருது அவருக்கு 35வது விருதாகும். இதன் மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் வரிசையில் யுவராஜ் சிங்கை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (76 முறை) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் விராட் கோலியும் (57) மூன்றாவது இடத்தில் சவுரவ் கங்குலியும் (37) உள்ளனர்.