ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிகார போதையில் செயற்படுவதாகவும், நாளை அவர் நினைக்கும் விடயங்கள் அனைத்தும் நாட்டில் சட்டமாகும் சூழல் ஒன்றே உருவாகியுள்ளதாகவும் ஆனந்த சாகர தேரர் எச்சரித்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவு ஊடாக மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் செயற்பாடுகள் தொடர்வதாகவும், இந்த நிலைமைய மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்பட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
வரலாற்றில் என்றுமில்லாதவாறு 69 இலட்சம் வாக்குகளை அவருக்கு அளித்தோம், என்ன காரணம்? நாட்டை மீட்டுப்பார் என்ற நம்பிக்கையே அது. எனினும் அது போதாது தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமென்றார், தேசிய சொத்துக்களை பாதுகாத்து, நாட்டின் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார் என நம்பினோம். அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுத்தோம்.
மூன்று மாதங்கள் செல்லவில்லை, தனக்கு 20 வேண்டுமென்றார். அதனையும் கொடுத்தோம். சகோதரர்கள் வரமாட்டார்கள், இரட்டை குடியுரிமையைக் கொண்டவர்கள் வரமாட்டார்கள் என்றார் எனினும் அதனையும் செய்தார். அப்போதும் நாம் அமைதியாக இருந்தோம். அண்மையில் அவசரகால சட்டம் வேண்டும் என்றார். எனினும் ஜனநாயகம் இருக்க வேண்டும். எனினும் யாரோ ஒருசில வர்த்தகர்கள் செய்யும் பிழைகளால் ஏனையவர்களும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இந்த சட்டத்தின் ஊடாக ஏற்பட்டுள்ளது.
இன்று அரசாங்கம் குற்றப்புலனாய்வு பிரிவினரை பயன்படுத்தி மக்களை அடக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. நாளை வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி வாயை மூடுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம். நாளை ஜனாதிபதி நினைப்பதே சட்டமாகும் நிலைமையை உருவாகியுள்ளது. ஜனாதிபதி நினைப்பது போன்று நாம் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசம் எமது நாட்டின் மீது கைவைக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நீங்கள் செய்தது என்ன? நீங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு, நாட்டு மக்களின் சுதந்திரத்தை, சுயாதீனத்தை இல்லாது செய்துள்ளீர்கள்.
நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்ததை நீங்கள் செய்யவில்லை. உங்களுக்கு அதிகாரத்தை வழங்கி, நீங்கள் அதிகார போதையில், ஒரு வலுவான மனிதனாக மாறியுள்ளீர்கள். இறுதியில் இந்த அடக்குமுறை மோசமான நிலைமைக்கு செல்லும், அந்த நிலைமைக்குச் செல்லாமல் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துங்கள். மக்களின் சுதந்திரத்தை அவர்களின் கருத்துக்களை மதித்து அது தொடர்பில் கலந்துரையாடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.