சர்வதேசத்திற்கு உள்நாட்டுப் பிரச்சினைகளை கொண்டுசெல்ல வேண்டாம் என கடந்த காலங்களில் எதிர்ப்பு வெளியிட்ட ராஜபக்ஷ குடும்பமே இன்று உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்திற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பம் இருப்பதாக இன்று கருத்துக்கள் வெளியாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயம் பற்றி கொழும்பில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவி்க்கையில்,
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை விடயத்தை சர்வதேசம் வரை கொண்டுசெல்வது உசிதமான செயற்பாடல்ல. கடந்த காலங்களில் தற்போதைய அரச தரப்பினர், உள்நாட்டிலுள்ள பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எதிர்கட்சியினர் இழுத்துச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வந்தார்கள். ஆனால் இந்தப்பிரச்சினையை இன்று சர்வதேசம் வரை கொண்டு செல்வது யார்? ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சட்டநடவடிக்கையை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. தேசிய பாதுகாப்பு விடயத்தை பெரிதளவில் பேசிய இவர்களே இன்று இவ்வாறு நழுவல் போக்கில் இருப்பதன் பின்னணியில் எமக்கு பாரிய சந்தேகம் எழுகின்றது.
அப்படியென்றால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் தற்போதைய அரசாங்கம் தான் இருக்கின்றது என்கிற பொதுவான குற்றச்சாட்டும் உள்ளது. இந்தப்பிரச்சினையை கைவிடமுடியாது. இந்நிலையில் இத்தாலிக்குச் செல்கின்ற ஸ்ரீலங்கா பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேசத்திற்கு இந்த விடயத்தை எடுத்துக்கூறி மூடிமறைக்க முயற்சிப்பதன் பின்னணி என்ன என்பதை நாங்கள் இன்று கேட்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.