அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை. -ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை. -ஜி.எல்.பீரிஸ்

ஐ.நாவின் 46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை. கொரோனா தொற்றுக்கு மத்தியில், உள்நாட்டு செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக நடவடிக்கை, இழப்பீட்டு அலுவலக நடவடிக்கை குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், கடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், வழக்குகளை விரைந்து தீர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜி.எல்.பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்தோடு 8 அம்ச செயற்றிட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *