தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரயத்தனம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரயத்தனம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதன் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான வி. குணாளன் தெரிவித்தார்.கல்முனை ஊடக மையத்தில் நேற்றையதினம்(18) கிழக்கு தமிழர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

“அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இராஜாங்க அமைச்சரால் அராஜகத்துக்கு உட்படுத்தப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டிய இடத்தில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளன. ஆயினும் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் அமைந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்தவர் நாமல். இராஜாங்க அமைச்சரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியைப் பெற்று கொடுக்க கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அங்கமாக சட்டத்தரணிகள் ஆலோசனைக் குழு விரைவில் நிறுவப்படவுள்ளது.

நாம் தமிழ் அரசியல் கைதிகளின் நலன், விடுதலை ஆகியன சார்ந்த விடயங்கள் தொடர்பாக அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை பெற்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.இதற்காக எமது தனிப்பட்ட நிதியையும் பயன்படுத்துவதற்கு ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் தயாராகவே உள்ளோம்” என்றார்.  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *