ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் புதுவருடம் பிறப்பது, வசந்த காலம் மற்றும் பண்டிகைகளை கொண்டாட வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால் கொரோனா அலைகள் மீண்டும் உருவாகுவதை தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் நாட்டைத் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குவதாகவும், நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பது மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்றும், அது கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் பெரும் உதவியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், நாட்டைத் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையில், நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 51 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற்றுக்கொண்டுள்ளனர். மற்ற வயதினருக்கும் விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.