நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலானது, ஸ்ரீலங்காவில் தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் பற்றி அரசாங்கம் நடத்திவரும் விசாரணைகள் போதுமானதாக இல்லை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ஞானசார தேரர் குறிப்பிடுவதுபோல இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் ஐ.எஸ் தீவிரவாத போதனைகளைக் கொண்டிருப்பவர்கள் இருக்கலாம்.
அவர்களால் தாக்குதல் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.நான் அனைத்து முஸ்லிம் மக்களையும் குற்றம்சுமத்துவதில்லை. ஆனால் சிங்களவர்கள், தமிழ் மக்கள் தவிர முஸ்லிம் மக்களே இந்த அடிப்படைவாத போதனைகளில் ஈர்க்கப்படுகின்றனர்.
கடந்த மாதம் நியூஸிலாந்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு முன்னதாக அவர் நாடு கடத்தப்படவிருந்தார். அவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தால் இலங்கையில் தான் அந்தத் தாக்குதலை அவர் நடத்தியிருந்திருப்பார்” என்றார்.