எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. -மணிவண்ணன்

எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. -மணிவண்ணன்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக இன்று ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஊடகங்களுக்கும் சமூகவலைத்தள நண்பர்களுக்கும் நன்றிகள். செய்திகளில் தொடர்ச்சியாக என்னைப்பற்றி எழுதி எனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவியுள்ளீர்கள். பத்திரிகையாளர்களிடமும், சமூக வலைத்தள எழுத்தாளர்களிடமும் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உங்களுடைய எழுத்துக்கள் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை பாதிக்காததாக இருக்க வேண்டும்.

என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் அதனை நான் கண்டுகொள்ளமாட்டேன். ஆனால் என்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் மக்களுக்கு கிடைக்ககூடிய அபிவிருத்தியை பாதிக்குமாறு எழுதாதீர்கள். ஆரியகுளம் புனரமைப்பு என்பது என்னால் தயாரிக்கப்பட்ட திட்டம். அதில் என்ன உள்ளது என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளோம். ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களை உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை குளத்தில் எந்தவொரு மதமும் பிரதிபலிக்க இடமளிக்கப்படமாட்டாது. இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் அச்சப்படும் வகையில் போலியான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகம் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விகாராதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தில் புத்தர்சிலை பற்றி எதுவும் கூறவில்லை. மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது பற்றியே கூறப்பட்டிருக்கிறது. ஒரு கடிதம் வந்தால் அதனை மாநகர சபைக்கு விடுவதே என்னுடைய வழமை. நாவலர் மண்டப விவகாரத்திலும் அதையே செய்தேன். நான் தனித்து முடிவெடுக்க இது என்னுடைய சொத்தல்ல. அதனை சபையே தீர்மானிக்க வேண்டும்.

இதனை என்னால் நிராகரிக்க முடியும். ஆனாலும் நான் நிராகரிக்காமல் அதை சபைக்கு விடுவதே வழமை. மதநல்லிணக்க மண்டபம் அமைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதம் உடனடியாக ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு, ஆணையாளர் ஊடாக செயலாளருக்கு அனுப்பபட்டது. கூட்ட நிகழ்ச்சிகளை தயாரிப்பது செயலாளரே. இந்த கடிதம் அடுத்த சபையில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதன்போது”மதச்சார்பற்ற இடமாக தொடர்ந்தும் ஆரியகுளத்தை பேணுவதுடன் மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாக பேணப்படவேண்டும்” என்று நான் தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோளை விடுப்பேன். அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் சபையின் வேலை. இப்போது ஆரிய குளம் பகுதியில் முதலாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இடம்பெறுகின்றன.

முதலாம் கட்டமாக நடைபாதை மற்றும் குளத்தைச் சுற்றி கம்பி வேலியடைத்தல் என்பன இடம்பெறும். இரண்டாம் கட்ட பணிகளுக்குரிய நிதிகளை நன்கொடையாளர்கள் தர முன்வந்தால் அபிவிருத்திப் பணிகள் தொடரும். இப்போது ஆரியகுளம்பற்றி முகநூலில் எழுதுபவர்கள் நாவற்குழியில் விகாரை கட்டப்பட்ட போது எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை.டிசம்பருக்கு பின்னர் நாங்கள் அதிகாரத்தில் இருக்கமாட்டோம். அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதனை அரசியல்வாதிகளும் சமூக ஆவலர்களுமே தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *