பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளது தென்னாபிரிக்க அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் மிக பலமான அணியாக வலம் வந்த தென்னாப்பிரிக்கா தற்போது பல குழப்பங்களில் சிக்கியுள்ளது. தென்னாபிரிக்க அணியின் மூத்த வீரர்களான டூப்ளசிஸ், இம்ரான் தாஹீர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் டி20 உலகக்கிண்ணம் தொடரில் விளையாட வாய்ப்பு பெறவில்லை.இதற்கு காரணம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் சகலதுறை நட்சத்திர வீரர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார்.
34 வயதாகும் மோரிஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன் என்று கூறுபவன் கிடையாது. ஆனால் தென்னாபிரிக்க அணிக்காக நான் கிரிக்கெட் இனி விளையாட மாட்டேன் என்பது உறுதி.என்னுடைய நிலைபாடு என்ன என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். அந்தவகையில் இனி நான் விளையாட மாட்டேன் என அவர்களுக்கு புரிந்து இருக்கும் என சூசகமாக குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, இனி உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.