ராஜபக்ச அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையைச் சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு கடந்த காலத்தில் தேசாபிமானம், தேசப்பற்று, இறையாண்மை பற்றி பேசிய அனைத்து கதைகளும் இன்று வெற்றுப்பேச்சுக்களாகியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,“அரசின் தூரநோக்கற்ற வேலைகளால், பல்தேசிய நிறுவனங்கள் நாட்டின் இறையாண்மையைத் தமது கையில் எடுத்துச் செயற்பட்டு வருகின்றன.
நிறுவனங்களுக்குத் தன்னிச்சையாகச் செயற்பட இடமளித்து விட்டு அரசு செய்வதறியாது வேடிக்கை பார்க்கின்றது.
இதற்காகவா 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை தெரிவு செய்தனர்?
அரசின் சில அமைச்சர்கள் தூதுரகங்களுக்குச் சென்று அடிபணியும் நிலைமையில் நாடு சர்வதேசத்துக்கு முன்னால் கேவலப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜதந்திரத்தை மறந்துள்ள அரசின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மையுடன் விளையாடி வருகின்றனர்.
நாட்டின் இறையாண்மையுடன் இவ்வாறு விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது. அரசின் இந்தத் தான்தோன்றித்தனமான வேலைத்திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்” என்றார்.