காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள ‘சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தேடப்படும் குற்றவாளி’ என்று ஒளி விளக்குகளால் பொறிக்கப்பட்ட மர்ம வாகனங்கள் கிளாஸ்கோ நகரம் முழுவதும் நடமாடித்திரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு போராட்டங்களின் அங்கமாக இந்த ஒளியூர்தி வழியான போராட்டமும் இருக்கலாம் என்று கிளாஸ்கோ வாழ் தமிழ் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.
கோட்டாபயவிற்கு எதிரான புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் அவர் தங்கியிருக்கும் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதால் இந்த மாநாட்டில் அவர் பங்கெடுக்க கூடாதென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியும் போர்க்குற்றங்களுக்கு அவரை பொறுப்புக்கூற வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் அழுத்தம் வகையிலும் நாளை மாநாடு இடம்பெறும் நிகழ்வு வளாகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ் மக்கள் இன்று லண்டனில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாலை புறப்பட்டனர். பிரான்ஸ் உட்பட்ட ஏனைய நாடுகளில் இருந்தும் மக்கள் கிளாஸ்கோவுக்கு வரவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கிளாஸ்கோவில் தங்கியுள்ள சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக ஸ்கொட்லாந்து தமிழர்கள் சமூகவலைத்தள பதிவுகள் ஊடாக கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பரோ மற்றும் ஐ.நா மாநாடு இடம்பெறவுள்ள கிளாஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் கோட்டாபயவுக்கு எதிராக பிரமாண்ட அளவில் சீரொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.