ராஜபக்சக்கள் வீசிய இறுதி ஆயுதம்-இலக்கு யார்?

ராஜபக்சக்கள் வீசிய இறுதி ஆயுதம்-இலக்கு யார்?

இலங்கையில் பௌத்த சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தும் அரசியலில் பௌத்த பிக்குகள் முதுகெலும்பாக இருக்கின்றனர். சட்டம், நீதி, நியாயம் எல்லாம் பிற அங்கங்களாகவே பொருத்திவிடப்பட்டிருக்கின்றன. தேவைப்படும்போது கழற்றிவைக்கவும், பூட்டிக்கொள்ளவும் கூடிய வசதிகளை இந்த அங்கங்கள் கொண்டிருக்கின்றன. ஆனால் பௌத்த பிக்குகளும், அவர்தம் சங்கங்களும் அவ்வாறானவையல்ல.

பௌத்த பிக்குகளை அடக்கிய சங்கங்களுக்குக் கட்டுப்படாதவர்கள் அதிகாரத்தில் இருக்கவும் முடியாது. அதிகாரத்தைப் பெறவும் முடியாது. அதிகாரத்தைத் தக்கவைக்கவும் முடியாது. எனவேதான் இலங்கை அரசியலின் ஆயுள்கால அனுசரணையாளர்களாகப் பௌத்த பிக்குகள் கொள்ளப்படுகின்றனர்.

இலங்கைத்தீவின் தலையெழுத்தை மகாவம்சமாக எழுதிய மகாநாம தேரரில் தொடங்கும் இந்த அனுசரணைப் பயணம், கண்டி கலவரம் ஊடாக, பொதுக்கட்டமைப்பை எதிர்த்து அழித்தமை, தமிழ் – சிங்கள கலைஞர்களது இணைவை கலைத்தமை, வடக்கு – கிழக்கு இணைவை பிரித்தமை, அளுத்கம வன்முறைகள், பொதுபலசேனா – இராவண பலயவின் உருவாக்கம் என நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.

இங்கு குறிப்படப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் இலங்கையின் பௌத்த சிங்கள அரசியல் பயணம் இனிமேல் மீளவே முடியாது, முட்டுச்சந்துகளில் நிற்கும் போது நிகழ்த்தப்பட்டவை என்பதை யாவரும் அறிவர். அந்தவகையில்தான் தற்போதும் பல சவால்கள் மிக்க முட்டுச்சந்தை பௌத்த சிங்கள தேசியவாத அரசு (பெரும்பான்மை மக்களுக்கான அரசு) எதிர்கொண்டிருக்கிறது.

இலங்கைத்தீவை மையப்படுத்திய புவிசார் அரசியலில் சீன – இந்திய (அமெரிக்க) போட்டிகள், கடன்கள், பொருளாதார நெருக்கடி, அந்நிய – உள்நாட்டு வருமானமின்மை, தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், விவசாயத்தின் வீழ்ச்சி, புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புகள் என அரசு எந்தப் பக்கம் தலையை நிமிர்த்தினாலும் நிமிரமுடியாதளவுக்கு பிரச்சினைகள் கிளம்புகின்றன.

இந்தப் பிரச்சினைகள், துரித அபிவிருத்தி, தனிச்சிங்கள அரசு கோசங்களை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த ராஜபக்சவினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எனவேதான் இவற்றிலிருந்து தப்பித்து, ராஜபக்சவினருக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களை திசைமாற்றிவிடுவதற்கான ஆயுதமொன்று அவசியப்படுகிறது. அந்த ஆயுதமாகவே பௌத்த சிங்கள கடுந்தேசியவாதியான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஞானசார தேரர் யார்?

1975 ஆம் ஆண்டு காலியில் பிறந்த இவர், களனி பல்கலைக்கழகத்தில் பௌத்தம் தொடர்பான பட்டத்தைப் பெற்றிருக்கிறார். ஜாதிக ஹெல உறுமய போன்ற பௌத்த சிங்கள கடுந்தேசியவாத அமைப்புக்களி்லிருந்து வெளியேறியவர்களைக் கொண்டு 2012 ஆம் ஆண்டு பொதுபலசேனா என்கிற அமைப்பை நிறுவி, தற்போது அதன் செயலாளராக செயற்பட்டுவருகிறார்.

அமைப்பாகவும், தனிநபராகவும் செயற்பட்டுவரும் காலத்தில் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரான பிரகீத் எக்னலியகொடவின் மனைவியாரை 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற வளாத்தினுள் வைத்து மிரட்டியமைக்காகவும், ஹோமாஹம நீதிமன்ற வளாகத்தினுள் அமைதியின்மையை ஏற்படுத்தியமைக்காகவும் கைதுசெய்யப்பட்டு 6 வருடகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்.

ஆயினும் 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டார். அதேவேளை இலங்கையின் சிறுபான்மையினத்தவரது மத உரிமைகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைமிகு கோரிக்கைகளை முன்வைத்ததோடு, அளுத்கம, திகன கலவரங்களுக்கு பின்னணியாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் இவர் மீது உண்டு.

விடுதலையடைந்தவுடன், இலங்கையில் ஆட்சிக் குழப்பங்கள் ஏற்பட்டன. எனவே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதனை ஆட்சி குழப்பத்தின் மூலம் மேற்கொண்ட முயற்சி, சட்டப்போராட்டத்தினால் தோல்வியில் நிறைவடைய, சட்ட ரீதியில் ஆட்சியைக் கலைத்து ஜனநாயக வழியில் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபாலசேனா ஏற்கனவே முன்வைத்து வந்த கோசங்கள் முன்னிடம் பிடித்தன.

தனிசிங்கள பெரும்பான்மை அரசு, ஒரே நாடு ஒரு சட்டம், பயங்கரவாத ஒழிப்பு என்பன பொதுஜன பெரமுனவின் கொள்கைகளாகவும் இருந்தன. ஏற்கனவே 2012, 2013 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோட்டபாய ராஜபக்சவிடம், பொதுபலசேனாவுக்கும் தங்களுக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறதே என வினவப்படும்போதேல்லாம், அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றே தெரிவித்து வந்தார். ஆனால் தேர்தலில் பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கும், பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் வித்தியாசமிருக்கவில்லை. அதன்படி ராஜபக்சக்களின் மீள் எழுச்சிக்கு பொதுபலசேனாவின் கொள்கைகள் கைகொடுத்தன எனலாம்.

ஆயினும் புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறி முன்பகுதியில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருந்த வர்த்தக உடன்படிக்கைகளாலும், முஸ்லிம்களுக்கான விவாக சட்டமுறைகள், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுபலசேனா அதிருப்தி கொண்டிருந்தது. அவ்வப்போது அரசுக்குத் தன் அதிருப்திகளை வெளிப்படுத்தியும் வந்தது.

சிங்கள அடிநிலை மக்களைப் பெரும் சூறையாகத் தாக்கியிருக்கும் விலைவாசி உயர்வு, கடும்போக்குடைய சிங்கள தேசியவாதிகளை அதிருப்திக்குள்ளாக்கியுமிருக்கிறது. இந்த அதிருப்திகள் சிங்கள மக்களின் கூட்டு எதிர்ப்பாக மாற வாய்ப்பிருக்கிறது என எச்சரிப்புக்கள் வரவே, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டடிருக்கிறது.

அதாவது, கடும்போக்குடைய பௌத்த பிக்குகளின் அமைப்பான பொதுபலசேனாவின் கொள்கையைப் பற்றி ஆராய்வதற்கான குழுவொன்று, அதே பொதுபலசேனாவின் தலைவரை தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சிறுபான்மையினரைப் பிரதிபலிக்க நான்கு முஸ்லிம்கள் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் யாருமே இல்லை என்ற வாதங்கள் தான் கடந்த வாரம் முழுவதுமாகப் பேசுபொருளாக இருந்தது.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் மையங்களை அடையாளங்கண்டு ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவிலும் தமிழர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற குரல்கள் அடங்குமுன்னரே இப்படியொன்று வந்திருக்கிறது. இதுபோன்ற ஆணைக்குழுவில் தமிழர்கள், தமிழ் புத்திசீவிகள் இணைந்து கவலைப்படுவதைத் தவிர வேறெதுவுமே செய்யமுடியாது என்பதற்கு ஒரு சம்பவத்தை இவ்விடத்தில் பதிவுசெய்யலாம்.

கடந்த நல்லாட்சி காலத்தின்போது மனோ கணேசன் அவர்களது அமைச்சின் கீழ் இலங்கையின் மக்கள் என்ற நூல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இலங்கையின் வரலாறு, தொல்லியல், பண்பாட்டியல் துறைசார்ந்த பல்வேறு ஆளுமைகள் இணைக்கப்பட்டிருந்தனர். தமிழின் மூத்த வரலாற்றுத்துறை பேராசிரியர் ஒருவரும் இணைக்கப்பட்டிருந்தார். அவரும் ஒரு கட்டுரையை அதில் எழுதினார்.

நல்லிணக்க ரீதியில் எழுதப்பட்ட அந்த நூலிலும் பெரும்பான்மைத்துவமே மேலோங்கியிருக்க, குறித்த தமிழ் பேராசிரியர் சிறுவிடயத்தை தமிழர் நோக்கிலிருந்து எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை புத்தகத்தில் இடம்பெற்றபோது, அதனைப் படித்த பேராசிரியர் அதிருப்தியடைந்தார். அவரது கருத்தைக் கூடப் பெரும்பான்மை வரலாற்றுக்கு கோணல் வராதபடியே மாற்றி வெளியிட்டிருந்தது நல்லாட்சியின் வரலாற்று எழுதியல் குழாம். பொதுக்கூட்டமொன்றில் இதனைச் சொல்லி கவலைப்பட மட்டுமே அந்தப் பேராசிரியரால் முடிந்தது.

உலகமே வியந்து பார்க்கும் தகைமையுடைய பேராசிரியருக்கே நிலைமை இதுவெனில், ஞானசார தேரரின் தலைமையின் கீழ் இணைந்து செயலாற்றப்போகும் தமிழரின் நிலை? (அப்படி இணைக்கப்பட்டால்). எனவே சுயாதீனமாக இயங்கமுடியாத இந்த ஜனாதிபதி செயலணிகளில் இருந்து தமிழர்கள் ஒதுங்கியிருப்பதன் ஊடாக உலகிற்குப் பல செய்திகளைக்கூறலாம். இதுபோன்ற பெரும்பான்மைவாத செயலணிகளில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை. ஒரே நாடு ஒரே சட்டத்தில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

எனவே இந்த சட்ட நடைமுறைகள் சிங்களப் பெரும்பான்மையினருக்கு மட்டுமானது, நாட்டின் உயரதிகாரமுடைய ஜனாதிபதியின் மனநிலையே இதுவெனில் சாதாரண சிங்கள மக்களின் நிலை தமிழர்கள் குறித்து எவ்வாறானதாக இருக்கும், பெரும்பான்மைவாத சட்டத்திற்குட்பட்ட தீர்ப்புக்கள் தமிழர் விடயத்தில் அநீதியாகவே செயற்பட்டிருக்கின்றன, (குமாரபுரம் படுகொலை தொடக்கம் மிருசுவில் படுகொலை வரையில்) ஆகவே இந்த சட்டமுறைகளில் தமிழர்களின் பங்களிப்பும் இல்லை. அதில் நம்பிக்கையும் இல்லை போன்ற விடயங்களைத் தமிழர்கள் உலகிற்கு அமைதியாகவே சொல்ல முடியும்.

இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு கருவியாக இந்தியாவினால் 13 ஆம் சீர்திருத்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோன்ற பௌத்த சிங்கள தீவிவாத பிக்குகளின் கடும் எதிர்ப்பினால் 13 ஆம் சீர்திருத்த சட்டம் கூட கடந்த காலங்களில் நலிவுபடுத்தப்பட்டிருந்தது. இணைந்த வடக்கு கிழக்கு என்பதை இல்லாமலாக்கி தனித்தனி மாகாணங்களாக்கியமைக்கு இந்தப் பௌத்த பிக்குகளின் போராட்டங்களும் மிகப் பிரதான காரணம்.

இப்போது அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து 13 ஐ கோருங்கள் என இங்குள்ள கட்சிகளுக்கு இந்தியாவினால் அழுத்தம் பிரயோகிக்கப்படும் நேரத்தில், ஒரேநாடு ஒரே சட்டச் செயலணியை சிங்கள கடுந்தேசியவாதிகள் மூலமாக செயற்படுத்த முனைவதும் 13 ஆம் சீர்திருத்த சட்டத்தை கிழித்தெறிவதற்கான ஏதுநிலைகளை உருவாக்குவதற்காகவும் இருக்கக்கூடும்.

2019 ஆம் ஆண்டின் பின்னர் சிங்கள கடுந்தேசியவாதிகள் முன்வைக்கும் தனிச் சிங்கள அரசுக்கான கோசத்தில் மாகாணசபை முறை நீக்கம் மிகப் பிரதான இடத்தைப் பெற்றிருந்தமையினையும் கவனிக்க வேண்டும். அத்தோடு ஒரே நாடு ஒரே சட்டம் என்பற்கு வெளியாக தமிழ் மக்கள் பக்கமாக இருப்பது தேசவழமை சட்டம் மாத்திரமே. அதுவும் இப்போது செல்லாக்காசாகிப் புத்தகங்களில் மட்டுமே இருப்பதை நாமறிவோம். இதனைக் கடந்து பார்த்தால், தமிழர்களின் பண்பாடு சார்ந்த சில விடயங்கள் இலங்கை பெரும்பான்மைவாதப் பண்பாடுகளுக்கு அப்பாலானவையாக இருக்கின்றன.

உதாரணமாக வேள்வி சடங்குகள். அவற்றுக்கும் புத்தளம் காளிகோயில் தொடக்கம், கவுணாவத்தை நரசிங்கர் ஆலயம் வரைக்கும் தடை வந்துவிட்டது. எனவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் கொண்டுவர தமிழர்கள் விடயத்தில் எந்த சரக்கும் இல்லை. எனவே இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதன் ஊடாக இலக்குவைக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள்தான். அதிலும் பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பது முஸ்லிம் விவாகச் சட்டம்.

பொதுபலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்கள் இந்த சட்டம் குறித்தே அதிக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்தன. இந்தக் கவர்ச்சிமிகு குற்றச்சாட்டுக்கள் சிங்கள மக்களை அதிகம் ஈர்த்தவை என்பதும் குறிப்படத்தக்கது.

எனவே அதனைத் திருத்தும் பணி அவர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபை, உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நெருங்குகின்ற காலத்தில் அதனை அவர்கள் அழகாக செய்துமுடிப்பர். அதேபோல முஸ்லிம் பெண்களது ஆடை, மாட்டிறைச்சி உணவு விடயத்திலும் இந்த செயலணி கவனம் செலுத்தும். இந்த விடயங்கள் குறித்த சட்டதிருத்தங்களுக்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களே தயாராகி வரும் நிலையில் திடீரென அதற்கென செயலணியை நியமித்து, அதனை நடைமுறைப்படுத்துவது கவர்ச்சி மிகு இனவாத பரப்புரைக்காகவென்றே மக்கள் கருதுகின்றனர்.

இவ்வாறாக சிறிய நேர்கோட்டை மறைக்கப் பெரிய நேர்கோட்டை கீறுவதைப்போல கையாளப்படும் பிரச்சினைகள் இத்தீவுக்குப் புதிதானதல்ல. ஆனால் தற்போது இடப்படும் கோடுகள் இனங்களுக்கிடையில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் வகையிலானவை. அவை இத்தீவு எதிர்கொள்ளும் அனைத்துவித ஆபத்துக்களையும் இனவாதத் தீயாக மடைமாற்றம் செய்துவிடும். இந்த இனவாதத் தீ இத்தீவை அழிக்க பயன்படுத்தப்படும் இறுதி ஆயுதமாகவும் அமையும். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *