ஆப்கானிஸ்தானில் குடும்பத்தின் வறுமையை போக்க, சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் பெற்றோரே விற்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியதுடன், ஆட்சி பொறுப்புக்கும் வந்துள்ளனர். ஆனால், இதுவரை உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் நலன் கருதி அளிக்கப்பட்டு வந்த பொருளாதார உதவிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய தாலிபான்கள் அரசு கடும் பொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கி வருகிறது. தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் சிக்காமல் இருக்க, அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர்கள் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் வெளியேறினர். ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத அன்றாடம் பிழைப்புக்கு அல்லல் படும் மக்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். இவர்கள் தற்போது திருமணம் என்ற பெயரில் தங்களின் பிஞ்சு பிள்ளைகளை முதியவர்களுக்கு விற்பனை செய்யும் கொடூரம் சமீப மாதங்களாக அரங்கேறி வருகிறது.
வறுமை காரணமாகவே பெரும்பாலான குடும்பங்கள் இதுபோன்று தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் பர்வானா மாலிக் என்ற 9 வயது சிறுமி, சொந்த குடும்பத்தினரால் 55 வயது முதியவருக்கு விற்கப்பட்டுள்ளது சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. 8 பேர் கொண்ட பர்வானா மாலிக்கின் குடும்பம் வறுமையால் நாளும் போராடி வந்துள்ளது. இந்த நிலையில் அப்துல் மாலிக் தமது 12 வயது மகளை சில மாதங்கள் முன்னர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது தமது 9 வயது மகளையும் விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார். ஆனால், தாம் படிக்க வேண்டும் ஆப்கானிஸ்தானில் ஒரு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என குறித்த 9 வயது சிறுமி பர்வானா தெரிவித்துள்ளார்.