2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பொது வேட்பாளர் தெரிவில் அமெரிக்காவின் தலையீடு குறித்த தகவல்களை முன்னாள் அமைச்சர் ஒருவர் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த நவீன் திஸாநாயக்க இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் திட்டம்
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்துவது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் திட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாக திஸாநாயக்க வெளிப்படுத்துகின்றார்.
பொது வேட்பாளராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அல்லது அவரால் முன்னிறுத்தப்படும் ஒருவரை அந்த திணைக்களம் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தாகவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
ரணில் – மைத்திரி அமெரிக்காவுக்கு பயணம்
மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுத்திருந்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த தீர்மானத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அந்த விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டு மாநாடு ஒன்றுக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக திஸாநாயக்க சுட்டிக்காட்டுகிறார்.
இந்த தொடர் நிகழ்வுகள் குறித்து மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்சகள் அறிந்திருந்ததாகவும் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.