மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளர்களுக்கு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பேருந்து சேவை சாதனையாளருக்கான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 150 சாதனையாளர்கள் காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 1450 சாதனையாளர்கள் கௌரவிக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக 30,000 பெறுமதியான காசோலைகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான மட்டக்களப்பில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் மொழியானது முற்றாக புறக்கணிக்கப்பட்ட நிலையானது கவலைக்குரியது என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.