இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்ட மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, கலவான மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலகப்பிரிவுக்கும், குருநாகலை மாவட்டத்தின் நாராம்மல பிரதேச செயலகப்பிரிவுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களின் 31 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அனர்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது. மேலும், மண்மேடு சரிதல், கற்பாறைகள் சரிதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்தங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.