அரச வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச வங்கி சேவையாளர்களின் சம்பளம் பல்வேறு காரணிகளினால் அதிகரிக்கப்படவில்லை அதன் காரணமாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தோம்.இருப்பினும் எதிர்வரும் 16ஆம் திகதி நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
16 ஆம் திகதி நிதியமைச்சருடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் எதிர்வரும் 22ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்.அதனை தொடர்ந்து ஒருவார காலத்திற்கு பின்னர் 3நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எதிர்வரும் மூன்று வருட காலத்திற்காக அரச வங்கி சேவையாளர்களின் சம்பளம் 13 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்.கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன.அதன் காரணமாகவே சம்பள அதிகரிப்பை வலியுறுத்துகிறோம். மூன்று வருடத்திற்கொருமுறை 7அரச வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
2018ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதைய சம்பள முறைமை காணப்படுகிறது.ஆகவே தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான தீர்மானத்தை வழங்க வேண்டும் என்றார்