இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை (12.11.2021) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் “திடல் திட்டம்” ஊடாக புனரமைக்கப்பட்ட விளையாட்டுத்திடல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று 10.11.2021 மாலை இடம்பெற்றது.குறித்த ஊடக சந்திப்பில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் உள்ள விசேட அம்சங்களும், திறப்பு விழா குறித்த விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
யாழ் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய கிளையின் பழைய மாணவர் சங்கத் தலைவரான எஸ். ஜெயப்பிரகாஸ் முக்கியமாக கருத்து தெரிவிக்கையில்,
வட மாகாணத்திலேயே சிறந்த ஒரு பாடசாலை மைதானத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். எமது மாணவர்களுக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய மாணவர்களுக்கும் இந்த மைதானம் பயன்பட வேண்டும். வடக்கு – கிழக்கில் உள்ள இளையோர்கள் விளையாட்டுகளிலும் சிறப்பாக ஈடுபட்டு தேசிய ரீதியிலும் சாதிக்க வேண்டும். அதற்கான வசதிகளை எம் மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கில் தான் மேற்படி மைதானம் பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மழை பெய்து 24 மணிநேரங்களில் வடிய கூடிய, சிறந்த வடிகாலமைப்பு வசதி, இலத்திரனியல் ஸ்கோர்போட், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், பயிற்சிகளுக்கான இடம், எந்தக் காலநிலையையும் தாங்கக் கூடிய புல் வகை நாட்டியமை, மைதான பராமரிப்பு போன்ற வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் இந்த நவீன விளையாட்டு திடல் உருவாக்கப்பட்டுள்ளது.
“ஒரு மாணவனுக்கு திறமை இருந்தாலும் அதனை வெளிப்படுத்துவதற்கான வசதி வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும். எமது மாணவர்கள் கல்வியைப் போல் விளையாட்டிலும் சாதிக்க சிறந்த ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்து முன்னுதாரணமாக திகழும் யாழ் இந்துக் கல்லூரியின் பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் எனத் தெரிவித்தார்” யாழ். இந்துக்கல்லூரியின் தலைமை மாணவ முதல்வர்.
இந்த விளையாட்டுத்திடலில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களும் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.“மாணவர்கள் இனிவருங்காலங்களில் உயர்த்தரத்தில் புனரமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் விளையாடி மேலும் பல சாதனைகளை கல்லூரிக்கு ஈட்டித்தருவார்கள் என தான் நம்புவதாகவும், யாழ் இந்து மைதானத்தின் குறைகளை தீர்த்து தந்த பிரித்தானிய கிளையினருக்கு நன்றியும் தெரிவித்தார்” பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்.
புதிய மைதானத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.