கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி அளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் பாதசாரிகள் கடவையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
“சாரதிகளே உங்கள் கவனயின்மை ஊரவனின் உயிரை குடிக்கும்” – “வேகம் விவேகமானதல்ல” – “வேகக் கட்டுப்பாடு நம் ஊரில் தட்டுப்பாடு” – போன்ற வாசகங்களைத் தாங்கி கறுப்புக் கொடி பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய காவல்துறையினர் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வு இன்றி வாகனங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.