பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் எட்டு பெண்கள் உட்பட 10 இலங்கையர்களை இந்திய சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் குறித்த அனைவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்ததாக IANS தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 171 இல் 140 பயணிகளுடன் பயணித்துள்ளனர். தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தீவிர ஆய்வுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.