அண்மைக் காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியன தரம் குறைந்தவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.தரம் குறைந்த எரிபொருட்களை பயன்படுத்துவதனால் தங்களது வாகனங்கள் பழுதடைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தரம் குறைந்த பெற்றோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக தாம் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பெற்றோல் மற்றும் டீசல் பயன்படுத்தி வாகனங்கள் செலுத்திய போது பயணம் செய்யக் கூடிய தூரமும், தற்பொழுது பயன்படுத்தப்படும் எரிப்பொருட்களின் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரத்திலும் வித்தியாசம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்பொழுது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சீக்கிரத்தில் தீர்ந்து விடுகின்றது எனவும், குறைந்த தூரமே பயணம் செய்ய முடிகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் எரிபொருளின் தரம் குறித்து பரிசோதனை நடாத்துவதற்கு சுயாதீன நிறுவனமொன்று கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஏற்கனவே சமையல் எரிவாயு தரம் குறைந்தது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களும் தரம் குறைந்தவை என பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.