சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.
இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர நிறுவனம், சீன உர நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக இது குறித்து அறிவித்துள்ளதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன உர நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சீன தூதர், கடிதமொன்றின் ஊடாக தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.