கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவர் , அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து அவற்றை மீள கையளித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுக்கு செல்வார்.
இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப்போன்று அப் பெண் தொழிலுக்கு சென்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ஒருவர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகம் செய்துள்ளார்.அதன் பின்னர் பெண்ணை மிரட்டி அவர் செல்லும் வழியில் பின் தொடருமாறு கூறியுள்ளார். மிரட்சியில் பெண்ணும் அவரை பின் தொடர்ந்துள்ளார். சிறிது தூரம் சென்று ஆள் நடமாட்டம் அற்ற பிரதேசம் ஒன்றில் வைத்து குறித்த பெண்ணிடமிருந்த பணம் , தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை அந்நபர் பறித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.இதன்போது அந்த நபரிடம் குறித்த பெண் தான் 3 பிள்ளைகளின் தாய் என்பதோடு , கணவன் இன்றி பிள்ளைகளுடன் தனியாகவே வசித்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கணவன் இல்லாததால் குடும்ப பொறுப்பு முழுவதையும் தானே சுமப்பதாகவும் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் தனது மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதாகவும் பெண் கூறியுள்ளார்.
அவரின் குடும்ப பின்னணியை கேட்ட திருடன் பறித்த அனைத்து பொருட்களையும் அவரிடமே மீள கையளித்துள்ளதோடு மாத்திரமின்றி பாதுகாப்பாக பிரதான வீதி வரை அழைத்தும் வந்து விட்டுள்ளார்.
சிறு வயது முதல் சுகபோகமாக வாழ்ந்து, வாழ்வில் உளவியல் ரீதியாகவோ பௌதீக ரீதியாகவோ எவ்வித பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்காமல், இன்று நல்ல நிலையில் ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் கூட தமது சுய நலத்துக்காக தவறிழைக்காதவர்களைக் கூட பழிவாங்கும் இந்தக் காலத்தில் , திருடன் ஒருவனிடம் இந்த மனிதாபிமானம் வெளிப்பட்டுள்ளமை, தமக்கு ஆச்சரியமளிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்