தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’ எனும் சக்தி வாய்ந்த புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு 208 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளி காற்று சூழன்றடித்தது. இதனால் சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்பைன்சை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இது பார்க்கப்படுகிறது.
2 நாட்களாக வீசிய புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 100இற்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்தப் புயல் காரணமாக சுமார் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ‘ராய்’ புயல் காரணமாக தற்போது வரை 208 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 52 பேர் மாயமாகி உள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அந்நாட்டுச் செய்திகளி தெரிவிக்கின்றன.