சர்வதேச அரங்கில் டொலரை சூழற்சி முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய நிலை காணப்படுகின்ற போதிலும், தற்போதைய சூழலில் அந்த வாய்ப்பு இலங்கைக்கு இல்லாது போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் நாளை என்ன நடக்கும்? என்ற அச்ச நிலையில் மக்கள் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்ச உணர்வில் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மின்சாரம் தடைப்படுமா? சமையல் எரிவாயு கிடைக்குமா? பொருட்கள் விலை மேலும் அதிகரிக்குமா? என்ற பதட்ட நிலையில் மக்கள் நாளாந்தம் பொழுதைக் கழித்துவருகின்றனர்.
உள்நாட்டில் பல வங்கிகளுக்கு டொலராகப் பெற்ற கடனை செலுத்தும் நெருக்கடியில் மத்திய வங்கி சிக்கியுள்ளது.
இதேவேளை என்ன தான் ஏற்பட்டாலும் கடன் தொகையினை திருப்பிச் செலுத்துவோம் என அரசாங்கம் ஒரே பிடியாக இருப்பதைப் பார்த்தால், யாருக்கு இவர்கள் கொடுப்பதற்கு அவசரப்படுகின்றார்கள் என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதார தரப்படுத்தலில் அடிமட்ட நிலையில் இருப்பதினால் சர்வதேச சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார தரப்படுத்தல் மீண்டும் உயர்வடையும் போது, சகல தடைகளும் நீங்கி, மீண்டும் வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
ராஜபக்ச ஆட்சியாளர்கள், பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத விளைவுகளை இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்” என்றார்.