நாட்டில் எரிபொருள் இருப்பு இன்னும் 10 நாட்களுக்கே உள்ளதாகவும், டொலர்கள் இல்லாத காரணத்தினால் கடலில் பல எரிபொருள் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் எரிபொருள் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. (30,000 மெட்ரிக் தொன் பெற்றோல், 50,000 மெட்ரிக் தொன் டீசல்) தற்போது ஜெட் எரிபொருள் உட்பட மூன்று எண்ணெய் தாங்கி கப்பல்கள் கடன் கடிதம் இல்லாமல் துறைமுகத்தைச் சுற்றி வருகின்றன.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் எண்ணெய் விநியோகம் செய்யாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்னவென்றால் இலங்கை மின்சாரசபை ரூ. 90 பில்லியன் கடனை செலுத்த வேண்டுமென கூறுகிறது.அண்மையில் தாம் இலாபம் ஈட்டியதாக பொய்யான தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 330 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது.
டொலர் கொடுத்தால் எரிபொருள் தருவதாக எரிபொருள்அமைச்சர் கூறுகிறார். எரிபொருள் வழங்கினால் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கூறுகிறார். இவற்றை யாரிடம் கேட்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு டொலர்களையும், மின்சார சபைக்கு எரிபொருளையும் கொடுக்க வேண்டியது அரசாங்கமே தவிர மக்கள் அல்ல. இதை அமைச்சரவை கூட்டாக நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் சொல்ல வேண்டும்.
எரிபொருள் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்களுக்கு ஊடக மாநாடுகளை நடத்தி இது அரசாங்கத்தின் குறைபாடுகள் தங்களுடையது அல்ல என்று கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை.
இதுபற்றி சில மாதங்களுக்கு முன்பு எச்சரித்தபோது, எரிபொருள், மின்சார நெருக்கடி இல்லை என்று தம்பட்டம் அடித்தார்கள். எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர்களோ அல்லது அரசாங்கமோ நாட்டின் பெறுமதிமிக்க தேசிய வளங்களை வெளிப்படையான கொள்முதல் எதுவுமின்றி விற்க வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.
ஏமாற்றப்பட்டவர்கள் நாட்டு மக்களே. அரசாங்கத்தாலும் அமைச்சர்களாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலையில் மக்கள் கூட்டாக ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.