சில தரப்புக்கள் கொமிஷன் பெறுவதற்காகவே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன, அரசாங்க தரவுகளின்படி தற்போது சந்தையில் தேவையான அரிசி கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருடாந்தம் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும், 3.6 மெட்ரிக் தொன்கள் நுகர்வுக்காகவும், 100,000 தொன்கள் சாகுபடிக்காகவும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
அரச அமைப்புகளில் உள்ள தரவுகளின் அடிப்படையில், இலங்கை 2019 இல் 4.78 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும், 2020 இல் 5.03 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும், 2021 இல் மேலும் 4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும் உற்பத்தி செய்துள்ளது.
எனவே, பெரும்போகத்தில் போதிய அறுவடை கிடைக்காவிட்டாலும், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை தேவையான அரிசி கையிருப்பு நாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.உள்ளூர் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் கொமிஷன்களை பெறுவதற்காக மட்டுமே அரிசி கையிருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது தெளிவாகிறது என மேலும் தெரிவித்தார்.