இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கிற்கு, சிறிலங்காவை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ள பிரான்ஸ், இந்தப் பிராந்தியத்தில் வெளிப்படையான நிதியுதவியை உறுதிப்படுத்த இந்தியாவுடன் இணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக பிரான்ஸ் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சீனா தனது நிதிச் செல்வாக்கைப் பயன்படுத்துவதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இது ஒரு பெரிய பிரச்சினை எனவும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் திட்டங்களுக்கு சீனா தனது நிதியுதவியைப் பயன்படுத்துவதாகவும், இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதுவர் இம்மானுவேல் லெனைன் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், சிறிலங்காவை உதாரணம் காட்டியுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் சிறிலங்காவின் மொத்த 35 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனில் 10 வீதத்தை சீனா கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 660 ஏக்கர் நிலப்பரப்பில் விசேட பொருளாதார வலயமாக உருவாகும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியன சீனா நிதியுதவி செய்த முக்கிய திட்டங்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனைவிட வீதிகள், பாலங்கள், துறைமுக கட்டுமானப் பணிகள் என சிறிலங்காவின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.