இலங்கையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மற்றொரு துறை!

இலங்கையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மற்றொரு துறை!

இலங்கையில் தற்போது எற்பட்டுள்ள டொலர் நெருக்கடியின் காரணமாக கடதாசி இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளமையால், அச்சுத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அரச அச்சகர்கள் சங்கத்தின் ஆலோசகர் எம்.டீ.ஆர். அதுல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் தினங்களில் அரச ஆவணங்களை அச்சிடுவதிலும் பாரிய சிக்கல் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (14-03-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நிலவும் கடதாசி தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களின் அச்சகங்களில் அச்சு நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும். கடதாசி மாத்திரமின்றி அச்சு துறைக்கு தேவையான ஏனைய பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

அரச அச்சக்கத்திலேயே லொத்தர் சீட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. தற்போது அவையும் வரையறுக்கப்பட்டளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. தொடர்ந்தும் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

உதாரணமாக எதிர்காலத்தில் அபராத விதிப்பு தொடர்பான சீட்டுக்களைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்படும். இதன் மூலம் மறுபுறம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் வருமானமும் வீழ்ச்சியடையும். அத்தோடு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள், சாதாரண வர்த்தமானி அறிவித்தல்களைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்படும்.

மேலும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றுக்கு அவசியமான ஆவணங்களை அச்சிட முடியாத நிலைமை ஏற்படும். விண்ணப்பபடிவங்களை அச்சிடுவதில் கூட சிக்கல் ஏற்படும். பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி இல்லை.

ஏற்கனவே இருப்பில் காணப்பட்ட கடதாசிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்காலத்தில் எவ்வாறு பாடநூல்களை அச்சிடுவது? இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படும்.

அரச அச்சக ஊழியர்களுக்கு மேலதிக வேலை நேர கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். அவ்வாறான நிலைமை ஏற்படும் போது ஊழியர்கள் வீதிக்கு இறங்கி போராடுவர்.எனவே இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இந்த நெருக்கடி தொடர்பில் அவதானம் செலுத்தி துரித தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *