திருகோணமலையில் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!

திருகோணமலையில் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!

சுகாதார நிபுணர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி தொழில்சார் சுகாதார வைத்தியர்கள் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம்(14) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பிற்பகல் ஒருமணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய், அரசு எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று, மேலதிக நேர கொடுப்பனவுகளைப் பெற்றுத்தா, 2006 ஆம் ஆண்டு சம்பள பரிசீலனையை நடைமுறைப்படுத்து, வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்றியமை மற்றும் பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்றுத்தா என்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உபசெயலாளர் குணரட்னம் சரவணபவன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திவந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பயனாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைய கடந்த வருடம் ஜூலை மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மேல் குறிப்பிட்ட கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தாமையினை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்தும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு மக்களை சங்கடத்திற்கு ஆளாக்காமல் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட ஓர் இரு மணித்தியாலங்கள் மாத்திரம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் மேல் மற்றும் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் சுகாதார அமைச்சு வழங்கிய உத்தரவுகளுக்கு அமைய தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு எடுக்கப்பட்ட கோரிக்கைகள் சுகாதார அமைச்சினால் உத்தரவாதமளிக்கப்பட்ட கோரிக்கைகள் எனவும் குறித்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் எழுத்து மூலமாக வழங்கப்படவில்லை எனவும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் துணை மருத்துவ சங்கம் மற்றும் தாதிய உத்தியோகத்தர் சங்கம் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *