உக்கிரன் மீதான தனது இராணுவ முற்றுகையை ரஷ்யா மேலும் இறுக்கமாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த வாரங்களில் மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய இராணுவ நகர்வு, இவ்வாரத்திலிருந்து மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், தரை, ஆகாய மற்றும் கடல்வழி முற்றுகை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
பிரித்தானியாவின் இணையத்தளம் ஒன்றின் தகவலின்படி, ரஷ்ய கடற்படையை சேர்ந்த 14 கடற்கலங்கள், உக்ரைனின் கரையோரப்பகுதியான “Odesa” பிரதேசத்தை நோக்கி நகர்வதை செய்மதித் தகவல்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது என தெரிவித்துள்ளது.
மூன்று பிரிவுகளாக நகரும் மேற்படி 14 கடற்கலங்களும், பாரிய இராணுவத்தளவாடங்களையும், பெருமளவிலான துருப்புகளை காவிச்செல்லக்கூடியவை எனவும், விசேடமாக, இவை காவிச்செல்லும் அனைத்தையும் கரைக்கு நேரடியாகவே கொண்டு சென்று தரையிறக்கக்கூடியவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இணையத்தளம் தெரிவிக்கிறது.
சுமார் 120 மீட்டர்கள் நீளமான “Pyotr Morgunov” என்றழைக்கப்படும் இக்கடற்கலங்களின் நகர்வானது, உக்ரைன் மீதான தனது இராணுவப்பலத்தை ரஷ்யா இறுக்கி வருவதையே குறித்து காட்டுவதாகவும் மேற்படி இணையத்தளம் கருத்துரைத்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் மேற்குப்புறமாகவுள்ள உக்ரைன் – போலந்து எல்லைக்கருகிலும் ரஷ்ய தாக்குதல்கள் விரிவடைந்துள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது.
நேட்டோ நாடுகளின் உக்ரைனுக்கான இராணுவத்தளவாட உதவிகள் அநேகமான உக்ரைன் – போலந்து எல்லையூடாகவே நடக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்தே ரஷ்யா போலந்து எல்லைக்கு தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக கருதும் நோர்வேயின் இராணுவ ஆய்வாளரான “Njord Wegge”,
ஐரோப்பாவின் மேற்கு எல்லையில், போலந்துக்கருகில் தனது நடவடிக்கைகளை ரஷ்யா விரிவுபடுத்துவதானது, நேட்டோ நாடுகளோ, அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளோ உக்ரைனுக்கு உதவுவக்கூடாதென்ற ரஷ்யாவின் எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளோ, அல்லது நேட்டோ நாடுகளோ உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை செய்தால், அந்நாடுகளும் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆளாகுமென ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மேற்கு ஐரோப்பா நோக்கிய ரஷ்யாவின் நகர்வு உற்று நோக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ள அவர், போலந்து எல்லைக்குள் ரஷ்யா தாக்குதல்களை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஏதும் ரஷ்யாவால் தாக்கப்பட்டால், நேட்டோ களமிறங்கும் என நேட்டோ தெரிவித்திருந்தாலும், நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து எல்லைக்குள் ரஷ்ய தாக்குதல்கள் நடைபெற்றாலும் நேட்டோ இராணுவ தாக்குதலில் இறங்குமா என்பது நிச்சயமில்லை எனவும் தெரிவிக்கும் ஆய்வாளர் “Njord Wegge”,
நேட்டோவின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாது மேற்கு ஐரோப்பா நோக்கிய ரஷ்யாவின் நகர்வுகளை உற்று நோக்கும்போது, உக்ரைன் விடயத்தில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல், தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ரஷ்யா எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருப்பதையே காட்டுகிறது எனவும் கருத்துரைத்துள்ளார்.