நேற்று (15.03.2022) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பெட்ரோலிய போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் ஒன்றை குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின்போது கருத்திற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், டீசல் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கட்டணத்தையும் திருத்தியமைக்குமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கியிருக்கவில்லை.
இந்நிலையில், இன்று மாலை இடம்பெற்ற இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தின்போது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர், தாங்கி உரிமையாளர்களுக்கான கட்டண திருத்தம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொலன்னாவ பெற்றோலிய வளாகத்திற்கு தனியார் தாங்கி உரிமையாளர்களின் வருகை இன்று குறைந்திருந்தது. இதன் காரணமாக இன்று நிலுவையில் உள்ள எரிபொருள் கையிருப்புகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.