அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் 12 அமெரிக்க உயர் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் வெளியுறவுச் செயலர் அண்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலர் லொயிட் ஒஸ்டின், செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி மற்றும் நிர்வாகத்தின் மற்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
ஆனால் இதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் முன்னாள் வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் பைடனின் மகன் ஹண்டர் ஆகியோர் மீதும் தடை விதிக்கப்பட்டதுதான்.
இந்த தடை நடவடிக்கைகள் ரஷ்யாவிற்குள் அவர்கள் நுழைவதைத் தடுக்கின்றன மற்றும் ரஷ்யாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் முடக்குகின்றன. தடை பட்டியலில் உள்ள மற்ற பெயர்கள் வருமாறு: கூட்டுப் படைகளின் தலைவர் மார்க் மில்லி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) நிர்வாகி சமந்தா பவர் திறைசேரி துணை செயலாளர் வாலி அடியேமோ அமெரிக்காவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவர் ரெட்டா ஜோ லூயிஸ் ஆகியோராவர்.எனினும், வோஷிங்டனுடன் உத்தியோகபூர்வ உறவுகளைப் பேணுவதாகவும், உயர் அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளவர்களுடன் உயர்மட்ட தொடர்புகளை பேணலாம் எனவும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.