இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், அதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
“இலங்கை அரசாங்கமும் மக்களும் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று வெய் கூறினார்.
அந்நியச் செலாவணி, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை உள்ளது.
செவ்வாய்க்கிழமை, எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் மீண்டும் தொடங்கியது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.