ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) வீட்டுக்கு விரட்டும் வரை நாட்டு மக்கள் விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) 66 ஆவது பிறந்தநாள் நினைவு தினத்தையொட்டி கொழும்பில் நேற்று முன் தினம் (21-04-2022) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,”தனக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயல்கின்றார்.
ரம்புக்கனை சம்பவத்தின் ஊடாகத் தான் கொலைகாரன் என்பதை ஜனாதிபதி மீண்டும் நிரூபித்துள்ளார்.கோ ஹோம் கோட்டா’ (Go Home Gota) என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.
இது ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.இதைப் பொறுக்க முடியாத கோட்டாபய அரசு, மக்களை வன்முறைக்கு இழுத்து அவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்க முயலும்.
எனவே, மக்கள் வன்முறையில் இறங்காமல் அமைதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராட வேண்டும். கொலைகாரக் கோட்டாபயவை வீட்டுக்கு விரட்டும்வரை மக்கள் ஓயாமல் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.