உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் துவக்க விழாவில், பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியதை முழு உலகமும் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.
துவங்கும் முன்பே தடங்கல்
ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பே, பிரான்சில் ரயில் பாதைகள் பலவற்றிற்கு தீவைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை நிலைமை முற்றிலும் சீரடையவில்லை.
விமான நிலையம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், பின்னர் அது போலி மிரட்டல் என தெரியவந்தது. ஒலிம்பிக் துவங்கும் நேரம் வானத்தில் கார் மேகங்கள் சூழ, மழை வந்தால் என்ன ஆகும், துவக்க விழா வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற குழப்பம் உருவானது.
தலைகீழாக ஏற்றப்பட்ட கொடி
இத்தனையும் தாண்டி ஒலிம்பிக் துவக்க விழா துவங்கியது. ஆனால், துவக்கமே படு சொதப்பலாக அமைந்தது. ஆம், ஒலிம்பிக் கொடியை ஏற்றியவர்கள் தலைகீழாக கொடியை ஏற்ற, பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
ஆரம்பமே சொதப்பலா, ஒலிம்பிக் என்ன லட்சணமாக நடக்கப்போகிறது என்பது இப்போதே நன்றாகத் தெரிகிறது என்னும் ரீதியில் ரசிகர்கள் கருத்துக்களை வெளியிடத் துவங்கினார்கள்.
பிற குளறுபடிகள்
வழக்கமாக ஸ்டேடியம் ஒன்றில் ஒலிம்பிக் துவக்க விழா நடக்கும். ஆனால், நாங்கள் வித்தியாசமாக நதியில் நடத்துவோம் என பிரான்ஸ் போட்ட திட்டமும் சொதப்பியது.
இயற்கை சதி செய்ய, மழை கொட்ட, விளையாட்டு வீரர்கள் மழையில் நனைந்தபடி படகுகளில் பவனிவந்தார்கள்.
மக்கள் துவக்க விழாவை பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சித் திரை மழையால் செயலிழந்தது.லேடி காகாவின் நடனக்குழுவைச் சேர்ந்த நடனக்கலைஞர் ஒருவர் நடனமாடும்போது தடுமாறி கீழே விழுந்தார்.
படகில் பயணித்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், படகுப் பயணம் ஒத்துக்கொள்ளாமல், கிட்டத்தட்ட வாந்தி எடுக்கும் நிலைக்கு ஆளானார்.
மொத்தத்தில் வித்தியாசமாக, பிரம்மாண்டமாக துவங்க திட்டமிட்டிருந்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சிகள், படு சொதப்பலாக அரங்கேறின!