திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபரான “சொல்டா” என்றழைக்கப்படும் அசித்த ஹேமதிலக்க போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 9.45 அளவில் நடந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குறித்த சந்தேக நபர் போலீஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, முல்லேரியா – சந்திரிகா குமாரதுங்க மாவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட ஆயுதங்களை காண்பிப்பதற்காக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை நேற்றிரவு அழைத்து சென்றுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது, சந்தேகநபர் போலீஸார் மீது கையெறி குண்டை வீசுவதற்கு முயற்சித்தபோது, எதிர் நடவடிக்கையாக போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
- துருக்கி ஓட்டமான் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும் – விறுவிறுப்பான வரலாறு (பாகம் 2)
- கடற்கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் 70 நாட்கள்: இந்திய மாலுமியின் உறையவைக்கும் அனுபவம்
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேக நபர், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
முல்லேரியா பகுதியைச் சேர்ந்த 35 வயதான சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் மர்ம மரணம்
இந்தியாவில் அண்மையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் பிரபல நிழலுலக தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாவாக அசித்த ஹேமதிலக்க இருந்துள்ளார்.
அங்கொட லொக்காவின் குழுவில் பிரதான துப்பாக்கி பிரயோகதாரராக அசித்த ஹேமதிலக்க செயல்பட்டு வந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
அசித்த ஹேமதிலக்க என்றழைக்கப்படும் சொல்டா, இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், மனித படுகொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் அங்கொட லொக்கா தொடர்புடையவர்.
இவர் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் மிக நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபராவார்.
இந்த நிலையில், அங்கொட லொக்கா நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்ததுடன், அவர் இந்தியாவில் வேறொரு பெயரில் வாழ்ந்து வந்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு இந்தியாவில் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் அங்கொட லொக்கா அண்மையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
எனினும், அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளதை இலங்கை போலீஸார் இதுவரை உறுதி செய்யவில்லை.
அங்கொட லொக்காவின் உயிரிழப்பை உறுதி செய்து கொள்வதற்கு மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரிகள் மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
சென்னை சம்பவம் குறித்து விசாரணை
இதற்கிடையே, இந்தியாவில் அங்கொட லொக்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றம் மாநில காவல்துறையின் குற்றப்புலனாய்வு சிஐடிக்கு அனுமதி வழங்கியுள்ளது.கோவையில் அங்கொட லொக்காவோடு தங்கியிருந்த அம்மானி தான்ஜி, போலி ஆதார் அட்டை தயாரிக்க உதவிய மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஷ்வரன் ஆகியோரை இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.